நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத் துறைக்கான தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும், பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. உலக வங்கியின் உதவியுடன் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்தப் பட்டியலை உருவாக்குகிறது.
இந்த தரவரிசைப் பட்டியலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார நிலை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவரை 3 கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 4 ஆம் கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பெரிய மாநிலங்களுக்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவுக்கு மொத்தம் 82.20 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 2018-19, 2019-20 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3-வது இடத்தில் 69.66 மதிப்பெண்களுடன் தெலுங்கானா மாநிலமும், 4-வது இடத்தில் 69.95 புள்ளிகளுடன் ஆந்திர பிரதேசமும் உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முதல் 4 இடங்களை தென் மாநிலங்களே பெற்றுள்ளன.
5-வது இடத்தில் மகாராஷ்டிரா, 6-வது இடத்தில் குஜராத், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் அடுத்தடுத்து முதல் 10 இடங்களில் உள்ளன.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலம் வெறும் 30.57 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது.
பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப் பிரதேசம் வளர்ச்சியடைந்து வருவதாக பாஜகவினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், சுகாதாரக் கட்டமைப்பில் தொடர்ந்து அம்மாநிலம் பின்தங்கியிருப்பது அதன் உண்மை நிலையை காட்டுவதாக சர்ச்சை கருத்துக்கள் எழுந்துள்ளன.
அதேபோல் சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிசோரம் முதல் இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வேகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.