தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட உள்ளது.
தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபாகரன் தோற்றம் கொண்ட பாபிசிம்ஹா வேலு பிரபாகரனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் வெங்கடேஷ் குமார் இயக்கவுள்ள படம் ‘சீறும் புலிகள்’. இவர் இதற்கு முன் லைட் மேன், உனக்குள் நான், நீலம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘சீறும் புலிகள்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ‘விடுதலைப் புலிகள்’ என்பதை மையப்படுத்தி இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுதாக கூறப்படுகிறது.