சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்தது சட்டத்துக்கு புறம்பானது என்று மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே உச்ச நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) வழக்கு தொடுத்துள்ளார்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ராபல் ஊழலை கவனித்து நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அக்டோபர் 24-ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு அளித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும், சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராகவும் நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். நாகேஷ்வர ராவ் மீது பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளை பிரபல மூத்த வழக்கறினர் பூஷன் முந் வைத்தார் .
மேலும் 55 வருட சிபிஐ வரலாற்றில் சிபிஐ இயக்குநர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கபடுவது, அதுவும் நள்ளிரவு அளித்தது அரசியல் வட்டாரங்களில் மிகப் பெரிய கண்டனத்தை மத்திய அரசுக்கு பெற்று தந்தது ..
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தாக்கல் செய்த மனுவில்,
“எதிர்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 பேர் கொண்ட குழு மட்டுமே சிபிஐ இயக்குநரை நியமிப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கமுடியும். அதேசமயம், சிபிஐ இயக்குநருக்கு எதிராக செயல்படும் அதிகாரம் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை உறுதி செய்த மல்லிகார்ஜூன் கார்கே செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “சிபிஐ-க்கு வழங்கப்பட்ட இந்த கட்டாய விடுப்பு சட்டத்துக்கு புறம்பான, நியாயமற்ற, தண்டனைக்குரிய செயலாகும்” என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, முன்னதாக, கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நடைபெற்று வருகிறது.