கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிசெய்யுமாறு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்” என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
 
கடந்த 16 ஆம் தேதி கஜா புயலால் தமிழகத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கரையோர கிராமங்களில் கடும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் தென்னை, பலா மற்றும் பழமை வாய்ந்த மரங்கள் சாய்ந்தன. லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்தன, பல கிராமங்கள், குக்கிராமங்கள் உட்பட சிறு ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளன. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தலைஞாயிறு உள்ளிட்ட பல கிராமங்களில் இன்னமும் மக்கள் குடிநீர், மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவராண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மின் இணைப்பு பணிகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன.
 
இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
 
இந்நிலையில், ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர், தமிழ்நாடு விவசாயிகளை காப்பாற்றுவோம்” என்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக இளைஞர்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.