பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்து, மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது பாஜக மோடி அரசு.

இதனையடுத்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதனிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. ஒருவர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைதால் ஆகஸ்ட் 5-ந் தேதி மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மெகபூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் மெகபூபா முப்தி மேலும் 3 மாதங்கள் ஸ்ரீநகரில் உள்ள ஃபேர்வியூ பங்களாவில் வீட்டுக் காவலில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா; இந்தியாவில் 18 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு