தண்ணீர் டிரம்மில் திணித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுமியின் சடலம்., 2 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு., சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எப்ஐஆர்.. தொடர் வன்முறைகளுக்கு ஆளாகும் சாத்தான்குளம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளை என்ற கிராமம். இங்கு வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு அப்பா இல்லை. அம்மாதான் வளர்த்து வந்துள்ளார். கரண்ட்கூட இல்லாத ஓலை குடிசை வீடு. அதனால் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி பார்க்க சென்றுள்ளார் அந்த சிறுமி.
சம்பவத்தன்று வடலிவிளை வாய்க்கால் பாலம் கீழே பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமி சடலமாக இருப்பதை பார்த்த சிலர் சிறுமியின் தாய் மற்றும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் கழுத்து, வாய் பகுதிகளில் நிறைய காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, சிறுமி பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளுவிளை பகுதியை சேர்ந்த முத்தீஸ்வரன், அவரது நண்பன் நித்தீஸ்வரன் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் இறுதியாக முத்தீஸ்வரன் வீட்டிற்கு தான் சிறுமி டிவி பார்க்க சென்றுள்ளார். அங்குதான் 2 பேருமே சேர்ந்து சிறுமியை சீரழித்து கொன்றுள்ளதாக முதல்கட்டமாக கூறப்பட்டது.
அதன்பிறகு சிறுமியின் சடலத்தை வீட்டில் இருந்த டிரம்மில் திணித்து, அந்த டிரம்மை காட்டுப்பகுதியில் இருந்த ஓடை பாலம் பக்கத்தில் வைத்துவிட்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் 2 பேருமே கைதாகி, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உறுதியாக தெரியும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது அதிகமாகி வருவதால், குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.