தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மாருதிராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் ஒன்றாக படித்தபோதே காதலித்து வந்தனர். பிரனய்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு அம்ருதா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிரனய்குமாரும், அம்ருதாவும் கடந்த மாதம் ஐதராபாத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மாருதி ராவ் கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதுதொடர்பாக மகளின் கணவர் குடும்பத்துக்கு அடிக்கடி பிரச்சனையும் கொடுத்து வந்தார். இதனால் பிரனய்குமாரும், அம்ருதாவும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். இருவரும் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இதற்கிடையே அம்ருதா கர்ப்பம் அடைந்ததால் கணவன்-மனைவி இருவரும் சொந்த ஊரான மரியாளகுடாவுக்கு வந்தனர். அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்காக அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரனய்குமார் அழைத்து சென்றார். அவர்களுடன் பிரனய் குமாரின் தாய் பிரேமலதாவும் சென்றிருந்தார்.
மருத்துவ பரிசோதனை முடிந்து 3 பேரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரனய் கழுத்தில் வெட்டினர். நிலைகுலைந்து விழுந்த பிரனய் குமாரை 2 பேரும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனய் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், சித்தப்பா ஸ்ராவன் ஆகியோர் கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்ததும் மாருதிராவும், ஸ்ராவனும் காரில் தப்பி சென்றனர். ஐதராபாத்தில் அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தனது கண் முன்பே காதல் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சியில் அம்ருதா மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
இதற்கிடையே பிரனய் குமாரை கொல்ல கூலிப்படைக்கு மாருதி ராவ் ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் பிரனய் குமாரின் தந்தை பாலசாமியும், தாயார் பிரேமலதாவும் தங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பலமுறை போலீசில் புகார் செய்தனர். மேலும் பாதுகாப்புக்காக வீட்டின் 4 புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு சென்ற சந்தர்பத்தை பயன்படுத்தி கூலிப்படையினர் பிரனய் குமாரை கொலை செய்துள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொலை நடந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து கூலிப்படையினர் 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் பெயர் அப்துல்பாரி, ஷதி ஆகும்.
அதேபோல் பிரனய் குமாரின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதே கூலிப்படையினரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர்கள் 20 நாட்களாக பிரனய் குமாரின் வீட்டை கண்காணித்ததும் தெரிய வந்தது.
அவர் எங்கெங்கு செல்கிறார் என்பதை அறிந்து கூலிப்படையினர் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த கொலைக்கு நல்கொண்டா பகுதி அரசியல் கட்சி தலைவர் கரீம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர் மாருதி ராவின் நண்பர் ஆவார்.
எனது மகள் வேறு ஜாதி பையனை திருமணம் செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை ஜீரணிக்கவும் முடியவில்லை. எனக்கு மானம், மரியாதை முக்கியம். என் மகள் பிரனய் குமாருடன் குடும்பம் நடத்தியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மானம், மரியாதையை காப்பாற்ற கூலிப்படையை ஏவி பிரனய் குமாரை கொலை செய்தேன். அவனை கொன்றதை நான் கவுரவமாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நானும் பிரனய் குமாரும் 10-ம் வகுப்பு படிக்கும் போதே காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டோம். அது பிடிக்காமல் எனது தந்தை கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துவிட்டார்.என் மாமனார், மாமியார் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
பிரனய் குமாரை கொலை செய்தால் நான் எனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று நினைத்து கொன்று விட்டனர். ஆனால் நான் எனது தாய் வீட்டுக்கு செல்ல மாட்டேன். எனது மாமனார் வீட்டில் இருந்தபடியே எனது குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பேன். எனது கணவரை கொன்ற என் தந்தையையும், கொலையாளிகளையும் தூக்கில்போட வேண்டும். என் கணவரை விட்டு விட்டு என்னை கொலை செய்தால் சந்தோசப்பட்டு இருப்பேன். ஆனால் என் கணவரை கொன்று அவரது பெற்றோரை தவிக்கவிட்டு விட்டனர் என கூறினார்.
அம்ருதா கர்ப்பம் தொடர்பாக பரிசோதனை செய்த டாக்டர் ஜோதி கூறியதாவது ” மாருதிராவ் என்னை சந்தித்து அம்ருதாவின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க வேண்டும் என்றார். அந்த குழந்தை பிறக்கக் கூடாது. கருவிலேயே அழித்துவிட வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்றார். ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை ” என டாக்டர் கூறினார்.
கொலை செய்யப்பட்ட பிரனய்குமாரின் இறுதி ஊர்வலம் மரியாளா குடாவில் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.