சீனாவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் திரையிடப்படுகிறது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு வெளியான நடிகையர் திலகம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தெலுங்கில் இப்படம் மாபெரும் வசூல் சாதனையை பெற்றது. மறைந்த நடிகை சாவித்ரிக்கு ’நடிகையர் திலகம்’ படம் சிறந்த அஞ்சலியாக இருந்தது என ரசிகர்கள் பலர் புகழ்மாலை சூட்டினர்.
பல்வேறு விருதுகள், பாராட்டுக்களை வாங்கி குவித்த இப்படம் உலகளவில் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகையர் திலகம் படத்தின் தெலுங்கு பதிப்பான மகாநதி திரையிடப்படுகிறது.
ஷாங்காயில், வரும் ஜூன் 15ம் முதல் 24 வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலகளவில் இருந்து திரைப்பட ஆர்வலர்கள் வருவார்கள். விழாவில் இறுதியில் பங்கேற்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.