கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் “பேட்ட” படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சென்னையில் இன்று பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், சிம்ரன், திரிஷா, நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேட்ட படத்தின் பாடல்களை ரசிகர்களே மொபைல் போன்கள் மூலம் வெளியிட்டனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கலாநிதிமாறன், “சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டும் தான். இனி அந்த இடத்துக்கு யாரும் வரமுடியாது. ஆள பாத்து எடை போட கூடாது என்பதற்கு உதாரணம் அனிருத்” என்றார்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கஜா புயலால் வீடு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களும் பணம் படைத்தோர் அனைவரும் உதவ வேண்டும். மிகப்பெரிய பாதிப்புக்கு அரசு மட்டும் நிவாரணம் வழங்க முடியாது என்று பேசினார். மேலும், விஜய் சேதுபதி ஒரு மகாநடிகன். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல நடிகருடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

2.0 படத்துக்கு வித்திட்டவர் கலாநிதிமாறன் தான். எந்திரன் படம் பாதியில் நிற்க வேண்டிய நிலையில் இருந்த போது, அதை கையில் எடுத்துக்கொண்டவர் கலாநிதிமாறன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மிகவும் திறமையானவர். என்னுடைய மிகப்பெரிய ரசிகனாக இருந்து இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ளார்” எனக் கூறினார்.

சசிக்குமார் பேசும்போது, “நான் அவருடன் 20 நாட்கள் வேலை செய்தேன். என்னடா படப்பிடிப்பு அதற்குள் முடிகிறதே என்று வருத்தமாக இருந்தது. அவர் மிகவும் சாதாரணமாக இருப்பார். எளிமையான மனிதர். அவர் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் தெரிவித்தார். அவர் எளிதில் இந்த இடத்திற்கு வரவில்லை. அவரின் அர்ப்பணிப்பு தான் காரணம்” எனத் தெரிவித்தார்.

மேலும், விழாவில் பேசிய விஜய் சேதுபதி, பெரிய ஆளை எதிர்த்தால்தான் பெரிய ஆள் ஆக முடியும். படத்தில் ரஜினியை நான்தான் எதிர்த்து இருக்கிறேன். அதனால் நான்தான் வில்லன்” என்று கூறியுள்ளார்.

நடிகை சிம்ரன் கூறும்போது, 15 வருடங்களுக்கு முன்பு இழந்த வாய்ப்பை பேட்ட திரைப்படத்தில் தான் திரும்ப பெற்றேன். எனக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை” என்று கூறினார்.

இது என் பல வருட கனவு. என்னுடைய கனவை நினைவாக்கிய கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி. திரைப்பட குழுவிற்கு நன்றி” என்று த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.