பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.
இந்த சூழலில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகப்படியாக அரசியலாக்கப்பட்டு விட்டது என ஓய்வுபெற்ற இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ஹூடா தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹூடா கூறியதாவது: “சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகப்படியாக மிகைப்படுத்தப்பட்டதாக கருதுகிறேன். .
இந்த தாக்குதல் முக்கியமானது. அதனாலேயே இதனை நடத்தினோம். ஆனால் அது எந்த அளவிற்கு அரசியலாக்கப்பட்டுள்ளது என்பது இப்போது தெரிகிறது. சரியோ தவறோ இதைப்பற்றி அரசியல் வாதிகளிடம் கேட்க வேண்டும்.
துவக்கத்தில் அது குறித்து சந்தேகங்கள் எழுவது இயற்கை தான். ஆனால் தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகப்படியாக சந்தேகங்களை எழுப்புவது தேவையில்லாதது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியமாக வைக்கப்பட்டதாலேயே நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்ய முடிந்தது” என்றார்.
இந்த தொடர்ந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ஹூடா பேட்டியை மேற்கோள் காட்டி சர்ஜிக்கல் தாக்குதலை தனது அரசியல் மூலதனமாக பாஜக அரசு மாற்றிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்