தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ். சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடையது தான் என ஒரு உதவி இயக்குனர் எழுத்தாளர் சங்கத்தில் முறையிட, உடனடியாக அதை கையில் எடுத்து விசாரிக்கத் தொடங்கினார் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர். எனவே இரண்டு கதைகளையும் படித்த உடனே புரிந்துகொண்டார் கதை ஒற்றுமை.

முதலில் ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து குணமாக தான் எடுத்துக் கூறினார். கெஞ்சியும் கூட உடன்படாததால், எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் என்ற பொறுப்பில், உண்மையை விவரித்து வருணிடம் கடிதம் ஒன்றை வழங்கினார். ஒரு உதவி இயக்குனருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பாக்யராஜ். அவர் தந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து வருண் ராஜேந்திரன் வழக்கு தொடரவே, வேறு வழியே இல்லாமல் சமரசத்துக்கு வந்தனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

இந்த விவகாரத்தால், மிகப் பெரிய இயக்குனர் என்று பெயர் பெற்ற ஏ.ஆர்.முருகதாஸின் மதிப்பு குறைந்தது. இதற்கிடையே பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் சர்கார் படத்தின் கதையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் பாக்யராஜ். இதற்காக மன்னிப்பு கோரி, தற்போது தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “மரியாதைக்குரிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னோட பணிவான வணக்கம். போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க. நானும் சந்தோஷமா பொறுப்பு ஏத்துக்கிட்டு மன சாட்சியோட நேர்மையா செயல் பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது.

திடீர்னு சர்கார் பட சம்பந்தமா சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சது. ஆனா அதுல பல அசௌகரியங்கள் தான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம நான் நேடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்.

சங்கத்துல சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாத்தி அமைக்க வேண்டி இருக்கு. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய சங்கத்தோட பெயரையும், சங்க உறுப்பினர்களோட நலனையும் காப்பாற்ற முடியாதோன்னு தோணுது. அதை உடனடியா சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனா என்னோட தலையாய கடமையா நினைக்கிறேன். அதுக்கு ஒரே வழி நான் உள்பட என்னை மாதிரியே போட்டி இல்லா பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினமா பண்ணிட்டு முறையா தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். ஆனா மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

சங்கம் இருக்கிற நிலைமையில், இப்ப தேர்தல் நடத்தறது, வீண் செலவுன்னு நிறையப் பேர் அபிப்ராயப்படலாம். ஆனா, சங்கமே வீணா போறதைவிட செலவு வீணாகறது தப்பில்ல. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏத்துக்கிறவங்க ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு, அதுக்கப்புறம் தேர்தலை நடத்த முடிவு பண்ணினா, நான் அதுல மீண்டும் தலைவர் பதவில முறையா நின்னு, மெஜாரிட்ட ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன். இப்படிக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே. பாக்யராஜ்.

எனக்கு நேர்ந்த அசௌகரியங்கள் என்ன? ஒழுங்கினங்கள் என்னாங்கறதை சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல. அதோட, முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலேயே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.



சர்கார் பட விவகாரத்தால் பல அசௌகரியங்களைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளர் பாக்யராஜ். அவை என்ன மாதிரியான அசௌகரியங்கள் என்பதை பாக்யராஜ் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் கூட, தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில், முன்னாள் நிர்வாகிகளான விசு மற்றும் பிறைசூடன் ஆகியோருக்கும் பாக்யராஜுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்ததாகவும் சர்கார் பட விவகாரத்தால், பாக்யராஜுக்கு நெருக்கடி முற்றி வந்த நிலையில், ஏற்கனவே இருந்த பகையும் சேர்ந்து அவரது பதவியை பறித்திருக்கிறது. சினிமாவில் நேர்மையாக ஒரு விஷயத்தை கையாண்டால், அவர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் பாக்யராஜ் என்று சினிமா வட்டடாரங்களில் பேசப்படுகிறது.