சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் அங்கு அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி இருந்த நிலையில் .
பூபேஷ் உள்ளிட்ட சட்டீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர்.
டெல்லியில் ராகுலுடனான ஆலோசனைக்கு பிறகு இன்று காலை ராய்பூர் திரும்பிய பூபேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மல்லிகார்ஜூன கார்கேவும், புனியாவும் இன்று பிற்பகலில் இங்கு வர உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உடனான கூட்டத்திற்கு முதல்வர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏ.,க்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே முதல்வர் தேர்வில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை டிசம்பர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அவர் பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.