கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
ஒன்றிய பாஜக அரசு அமைந்தது முதல் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதிலும், செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியை ஒவ்வொரு சமயங்களிலும் புறக்கணிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை பரவல் குறையத் தொடக்கி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதமாக கொண்டு மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் வகையில், அவர்களே ஒன்றிய அரசு, மாநில அரசுகள் என வெல்வேறு விலை நிர்ணயம் செய்ய அனுமதி அளித்து, தடுப்பூசியை மாநில அரசுகளே நேரடியாக வாங்கும் வகையிலான செயல்களிலும் ஈடுபட்டது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கு ஒன்றிய அரசு, கோவின் (cowin) என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த தளத்தில் தான் 18 முதல் 45 வயதினர் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இந்திய அரசின் கோவின் (COWIN) இணைய தளத்தில் இருந்து தொலைப்பேசி எண் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் வகை செய்யப்பட்டிருக்கிறது.
அதில் மொழிகளுக்கான தேடலில் இன்று புதிதாக மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா உள்பட 9 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழியை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு வர பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை கொரோனா தடுப்பூசி இணைய தளத்திலும் மோடி அரசு கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
பாடத்திட்டத்தில் யோகி ஆதித்யநாத், ராம்தேவின் புத்தகங்கள் சேர்ப்பு- கொந்தளிக்கும் மாணவர்கள்