இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
இங்கிலாந்தின் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கும் இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி அளித்தது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும், முழுமையான சோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனைப் பெற முடியும்.
இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகளின் முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை முழுமையாக முடிக்காமல் தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது மக்களிடையே தடுப்பூசி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
மத்திய அரசு அரசியல் நோக்கத்திற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்காக அவசர அவசரமாக தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும். யார் யாருக்கு என்ன மருந்து செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கேள்விகளுக்கு வாய்ப்பளிக்காமல் கோவாக்சின் தடுப்பூசிக்கு அறிக்கை மூலம் அனுமதி அளித்தது ஏன் என்று மருத்துவர்கள் வினவி உள்ளனர்.
எந்த மருத்துவ சட்டப்பிரிவின் அடிப்படையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், 110% நம்பகமானது என்று தரக்கட்டுப்பாட்டு ஆணையர் கூறுவது எந்த அறிவியலின் அடிப்படையில் என்றும், தடுப்பூசி ஒப்புதலுக்கான நிபந்தனைகள் குறித்த தரவுகள் எங்கே என்றும் மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘கோவாக்சின், கோவிஷீல்டு’ 2 தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி- மத்திய அரசு