கோமாளி படத்தின் டிரைலரால், “நாளைய தமிழகம் ரஜினி” என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. காஜல் அகர்வால், யோகி பாபு, ஷாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஒன்பது கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இப்படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது.
16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீண்டு எழுகிறார் ஜெயம் ரவி. பெரியதாக மாறிவிட்ட உலகை ஜெயம் ரவிக்கு அறிமுகப்படுத்துகிறார் யோகி பாபு. அதன் வழியாக பல விஷயங்களை கலாய்க்கின்றனர்.
இந்த டிரெய்லரின் கடைசியில் வரும் காட்சியில் ஜெயம் ரவி, இது எந்த வருடம் என்று கேட்க, இது 2016 ஆம் வருடம், வேண்டும் என்றால் டிவியை பாரு என கூறுகிறார் யோகி பாபு. செய்தி தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவேன் என அறிவிக்கும் காட்சி ஓடுகிறது. அதை பார்க்கும் ஜெயம் ரவி இது 1996 எனக் கூறி தான் கோமாவில் இருந்ததை நம்ப மறுக்கிறார்.
இந்த டிரைலர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்மீக அரசியல் பற்றி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அவர் அறிவிப்பு வெளியிட்ட இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. எப்போது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், நேற்று நடந்த கோமாளி இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகிய இருவருமே, ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர் அரசியலுக்கு வருவது தான் எங்களது ஆசை. அதனை குறிப்பிடும் வகையில் தான் டிரைலரின் ரஜினியின் அரசியல் கருத்து குறித்து இடம்பெற்றிருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், ரஜினி ரசிகர்கள் ‘நாளைய தமிழகம் ரஜினி’ என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.