கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், தவறான தகவலை அளித்ததாகக் கூறி பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரான கோகுல்ராஜ், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தன்னுடன் பயின்று வந்த சுவாதி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழகியுள்ளார்.
இதனிடையே கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருவரும் சந்தித்துள்ளனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 8.3.2022ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடன் பயின்ற சுவாதியை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று, சுவாதி நேரில் ஆஜரானர். அப்போது அவரிடம், 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சி போடப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும் பெண் நீங்கள் தானா?, பக்கத்தில் இருப்பவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பியிருந்தனர்.
அதற்கு சுவாதி, வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது என்று பதிலளித்திருந்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று சுவாதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைக்காவது உண்மையைச் சொல்ல முயற்சியுங்கள். அன்றும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்கடேஷ் அமர்வில் இன்று (30.11.2022) உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சுவாதி, தனக்கு எதுவும் தெரியாது என்று கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று பதிலளித்திருந்தார்.
இதனால் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்ததற்காக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் சுவாதி பொய்யான சாட்சி வழங்குவதாக தெரிய வருகிறது என்றும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.