கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த இறுதியாண்டு மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவருகிறார். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பணியில் ஈடுபடுபவர்கள் வீட்டிற்கு செல்லாமல் விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த மாணவி பிரதீபா, கடந்த 16-ம் தேதி முதல் பணி முடித்துவிட்டு பெரம்பூரில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில், தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்ல வேண்டிய பிரதிபா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சக மாணவிகள் மற்றும் காவலாளிகள் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது, பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
மேலும் வாசிக்க: போலி ‘ஆரோக்கிய சேது’ செயலி பரவல்-இந்திய ராணுவத்தினருக்கு எச்சரிக்கை
உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொது பிரதீபா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை கீழ்ப்பாக்கம் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர், காவல்துறை இணை ஆணையர் சுதாகர் ,கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீபா மரணம் குறித்து சக மருத்துவர்கள் கூறும்போது, “பிரதீபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்புப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள், உணவு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததால், மேலும் பல மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.