கொரோனா பொது முடக்க காலத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்களது வீடுகள் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலையில் கேரளா, மகாரஷ்டிரா அரசுகள் தங்கள் மாநிலங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சலுகைகள் அறிவிக்கப்படாவிட்டாலும் வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன.
கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் வசூலித்த தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தமிழக அரசின் மின்கட்டண குளறுபடியை எதிர்த்து இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தங்கள் வீடுகளிலும் கட்சி அலுவலகங்களின் முன்பும் கருப்பு உடை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலும் புகுந்த கொரோனா…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கறுப்புக்கொடி ஏற்றியும் கையில் கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார். இதேபோல் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலினும், சிஐடி காலனியில் கனிமொழியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழகத்ததின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர், தமிழக அரசின் மின் கட்டணத்தை கண்டித்தும், கணக்கு எடுப்பதில் உள்ள குழப்பங்களை நீக்கி மின் நுகா்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு, பொது முடக்க காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக முந்தைய மாதத்துக்குச் செலுத்திய மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு பதில், அந்தத் தொகைக்கு உரிய யூனிட்களை கழிக்க வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டணக் கொள்ளையடிக்கும் அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி முழக்கம்! https://t.co/gpW2pKoRRz
— M.K.Stalin (@mkstalin) July 21, 2020