ஊரடங்கு காரணமாக ஏப்ரல் – ஜூலை வரையில் சம்பள ஊழியர்கள் 1.89 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE)தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மார்ச் மாதம் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் ஏராளமான தொழில் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியதால், செலவுகளை குறைக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. இதனால் ஏராளமான ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
ஏப்ரல் மாதத்திற்கு பின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளில் சிறிது முன்னேற்றம் இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தது.
ஆனால் ஏப்ரலில் வேலையிழந்த 91.2 மில்லியன் பேர்களில் மே மாதத்தில் 14.4 மில்லியன் பேருக்கும், ஜூன் மாதத்தில் 44.5 மில்லியன் பேர்களுக்கும் ஜூலையில் 25.5 மில்லியன் பேருக்கும் மீண்டும் வேலை கிடைத்துள்ளது. 68 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை இல்லாமல் உள்ளது.
ஊதியம் பெறும் ஊழியர்கள் பிரிவில் மட்டும் வேலையிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து உயருவதாகவும், இந்த போக்கு வருத்தமளிப்பதாகவும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டுமே கொரோனா பொதுமுடக்கத்தால் 1.77 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அதன்பின் மே, ஜூன் மாதங்களில் 40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின. அதைத்தொடர்ந்து ஜூலை மாதத்தில் மீண்டும் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதனர். இதனால் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் நிலை மிக மோசமடைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
புதிய வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் அமைப்புசாரா துறையில் மட்டுமே உருவாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில் அமைப்புசாரா மற்றும் நிரந்தர சம்பளம் இல்லாத துறைகளில் சற்றே முன்னேற்றம் தெரிகிறது என சிஎம்ஐஇ கூறுகிறது.
அமைப்பு சார்ந்த துறை ஊழியர்கள், சம்பளம் பெறும் ஊழியர்களின் நிலை இன்னும் பரிதாபமாகவே இருக்கிறது. பெரும்பாலும் நகரங்களைச் சேர்ந்தவர்களின் வேலை இழப்பால், நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது பொருளாதாரத்துக்கு கவலை அளிப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாசிக்க: முதல்வர் யோகியின் ராம ராஜ்ஜியத்தில் தொடரும் பாலியல் வன்முறைகள்..