ரேபிட் டெஸ்ட் கருவி என்பது கொரோனாவை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தலாம். கொரோனாவை கண்டறிய பிசிஆர் சோதனை அவசியம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 21,797 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறுவதை தடுப்பதற்காக, மக்களிடம் அதிகளவில் பரிசோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பரிசோதனையை விரைவாக நடத்துவதற்காக சீனாவிடம் காத்திருந்து லட்சக்கணக்கில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகள் வாங்கப்பட்டது.

ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் 5.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே துல்லியத்தன்மை இருப்பதாக மேற்கு வங்கம், ராஜஸ்தான் உட்பட பல மாநில அரசுகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு இக்கருவிகளை பயன்படுத்த வேண்டாமென அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மேலும் வாசிக்க: இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்நிலையில், ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவி குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எழுதிய கடிதத்தில், தனிநபர்களில் ஆன்டிபாடிகள் உருவாவதைக் கண்டுபிடிப்பதற்கு, கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே, இந்த ஆன்டிபாடி ராபிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிட்டுள்ளபடி, கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம். கொரோனா தொற்று கண்டறிய பயன்படுத்தப்படும் பிசிஆர் பரிசோதனை முறைக்கு மாற்றாக, ரேபிட் டெஸ்ட் சோதனையைப் பயன்படுத்தப்பட முடியாது.

ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக்கும், பிசிஆர் பரிசோதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மாநில அரசுகள் நன்றாக அறிவிந்திருந்தும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது அளித்துள்ள விளக்கம், சில மாநில அரசுகளுக்கு சரியான புரிதல் இல்லை என்று மறைமுகமாக சொல்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.