கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1000 பேரை குணப்படுத்தியுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகின் 600 முன்னணி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், மருத்து கண்டுபிடிக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் துனை நிறுவனரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா வெளியிட்ட அறிவிப்பில், “சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாகவே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பதஞ்சலி நிறுவனம் இறங்கிவிட்டது. பதஞ்சலி மருந்து பரிசோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டு முழுவதுமாக உருவாக்கப்பட்டுவிட்டது.
பதஞ்சலி மருந்துளை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஐந்து நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சீராக உட்கொண்டால் அவர்கள் குணமடைவார்கள். நாடு முழுவதும் பல்வேறு கொரோனா நோயாளிகளுக்கு பதஞ்சலி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 80% பேர் விரைவில் குணமடைந்துவிட்டனர். இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோரை குணப்படுத்தியிருக்கிறது பதஞ்சலி மருந்து என்றும் கூறியுள்ளது.
வேதங்களை கவனமாக படித்து, வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சூத்திரங்களை கடைப்பிடித்து முழுக்க முழுக்க ஆயுர்வேத பொருட்களை கொண்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு விதிமுறைப்படி பதஞ்சலி மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் கூறுவது உண்மையா, பொய்யா என்பது குறித்து இதுவரை இந்தியா சுகாதாரத்துறை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேபாளத்தில் இந்தியப் பகுதிகளான லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை இணைத்த புதிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவை.
இங்கு அமைந்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாலகிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. தற்போது நேபாள-இந்திய எல்லையில் சர்ச்சைகள் வெடித்துள்ளதால், நேபாளப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்னும் டிரெண்ட் டிவிட்டரில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பதஞ்சலி நிறுவன தலைமை அதிகாரி நேபாளி எனக் கூறப்படுவதால் பதஞ்சலியைப் புறக்கணிப்போம் ( #BoycottPatanjali ) என்னும் ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.