ஜீவா நடித்துள்ள ‘கொரில்லா’ படத்திற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள காமெடி த்ரில்லர் படம் கொரில்லா. இப்படத்தில் காங் என்கிற குரங்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தில் நிஜ குரங்கை பயன்படுத்தியதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது என்று கூறி 5 காரணங்களை பீட்டா வெளியிட்டுள்ளது. படம் குறித்து பீட்டா தெரிவித்திருப்பது, குரங்குகளை அதன் தாயிடம் இருந்து பிரிக்கிறார்கள். சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் பயன்படுத்தப்படும் குரங்குகள் பிறந்த உடனேயே தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. அந்த குரங்குகளை மோசமாக நடத்துகிறார்கள்.
பயிற்சியாளர்கள் அவ்வப்போது குரங்குகளை குத்துவது, அடிப்பது, எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது என்று கொடுமைப்படுத்துகிறார்கள். குறைந்த டேக்குகளில் காட்சியை படமாக்க அவை துன்புறுத்தப்படுகின்றன. படக் காட்சிகள் குறைவாக இருக்கலாம் ஆனால் விலங்குள் அதன் ஆயுள் முழுவதும் கஷ்டப்படுத்தப்படுகின்றன.
குரங்குகள் வளர்ந்த பிறகு அவற்றை கட்டுப்படுத்துவது கடினமாகும்போது அவற்றை கூண்டுகளில் அடைத்து தனிமைப்படுத்துகிறார்கள். உயிருடன் இருக்கும் விலங்குகளை பயன்படுத்துவது தேவையில்லாதது. வெற்றிப் படங்களான பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் மற்றும் தி ஜங்கிள் புக் படங்களில் நிஜ விலங்குகளை அல்ல மாறாக சிஜிஐ தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்தினார்கள். குரங்குகளை தவறாக சித்தரிப்பது அவற்றின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரில்லா படம் குறித்து நடிகர் ஜீவா கூறும்போது, இது ஒரு வித்தியாசமான படம். இப்படி ஒரு படத்தில் நான் நடிப்பேன் என்றே நினைக்கவில்லை என்று கூறி மகிழ்ந்துள்ளார்.
தற்போது கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது என்று கூறி பீட்டா இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பீட்டாவின் அறிக்கையை பார்த்தவர்கள் அது எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு படத்தில் என்ன உள்ளது என்பதை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.