மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணைக்கு தண்ணீர் வந்தது. இங்கிருந்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கும், உபரிநீர் கொள்ளிடம் ஆற்றுக்கும் திறந்து விடப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்க கடலில் கலக்கிறது. அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், முகத்துவாரம் தூர்வாரப்படாததாலும் வங்க கடல் காவிரி நீரை உள்வாங்கவில்லை.
இதனால் காவிரிநீர் அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்தது. ஒரு கி.மீ. தூரத்துக்கு உட்புகுந்ததால் கீழகுண்டலபாடி, திட்டுகாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது. வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் 3 கிராம மக்களும் படகு மூலம் சென்று வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இருபுற கரைகள் தெரியாத அளவுக்கு வெள்ளம் வழிந்து செல்கிறது. அகரநல்லூரில் பழைய கொள்ளிடக்கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்தது.
இதனால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சில கிராமங்களில் கழுத்து அளவு தண்ணீர் நிற்கிறது. இதனால் கிராம மக்கள் வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறி மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.பலர் நீந்தி மேடான இடத்துக்கு சென்றதையும் காணமுடிந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அந்தந்த கிராமங்களில் இளைஞர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் பேர் புயல் பாதுகாப்பு மையத்திலும், 600 பேர் தனியார் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.மீட்பு பணிக்காக கடலூரில் இருந்து 8 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வேளக்குடி, பெராம்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 2 டாஸ்மாக் கடைகளும் நேற்று மூடப்பட்டன. மேலும் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத கொடுமையில் தமிழக விவசாயிகளைத் தள்ளி, அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும்
இருமுறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல்.,
காவிரி டெல்டா பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், குளங்களும் முறையாக உரிய காலத்தில் தூர்வாரப்படாத காரணத்தால், தினமும் 2 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டும் கூட, அந்தக் குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை என்றும்.,
குறிப்பாக, திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் தண்ணீரே இல்லாமல் இன்னும் வறண்டே காட்சியளிப்பது, அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணமாகத் திகழ்கிறது என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்