கொடநாடு விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி குறித்து பேச மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி கூறியதாலே தங்கள் கொட நாடு உள்ளே நிழைந்ததாக கூறிய நிலையில் ..
அந்த கருத்துகள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் அளித்த புகாரின் அடிப்டையில், சயன், மனோஜ் ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்றப்பரிவு போலீஸார் தில்லியில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம், சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் சிறையில் அடைக்க மறுத்துவிட்டது. மேலும் சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.
இந்த சூழலில் புதனன்று சென்னை வந்திருந்த மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு விவகாரம் தொடர்பாக பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கான கூடுதல் ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு, முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் முதல்வர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதன்படி வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி குறித்து பேச மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மேத்யூ உட்பட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.