கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பின், கடும் வெயில் காரணமாக மண் புழுக்கள் அதிகளவில் இறப்பதாக வயநாடு, இடுக்கி மாவட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.
கேரளாவில் சமீபத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, பிறகு வடிந்தது. வழக்கமாக மழைக்குப் பின் நிலத்தில் மண்புழுக்கள் அதிகளவில் காணப்படும். ஆனால், தற்போது மண்புழுக்கள் இறந்து கிடக்கின்றன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள நிலப் பகுதிகளிலும் மண்புழுக்கள் அதிகளவில் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்ணின் வளத்தை பராமரிப்பதில் மண்புழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவை தற்போது அதிகளவில் இறப்பது வேளாண் விஞ்ஞானிகளுக்கும், கேரள அரசுக்கும் கவலை அளித்துள்ளது. கேரளாவில் மழைக்குப்பின் கடும் வெயில் அடிக்கிறது. கடந்த மாதம் 21ம் தேதி 22 டிகிரி செல்சியஸ், கடந்த வியாழக்கிழமை 29.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் மூத்த இயக்குனர் அனில் குமார் கூறுகையில், ‘‘மண் புழுக்கள் 15 முதல் 28 டிகிரி வெப்பத்தை தாங்கக் கூடியவை. அதற்கு மேல் வெப்பம் அதிகரித்ததால் இறந்திருக்கலாம். மண்புழுக்கள் இறப்பதால் விவசாயம் பாதிக்கும்’’ என்றார். கடந்த 2016ம் ஆண்டு கோடைக் காலத்திலும், வயநாட்டில் இதேபோல் அதிகளவில் மண்புழுக்கள் இறந்துள்ளன.
ஆனால் இதற்க்கு முற்றிலும் வேற காரணத்தை வயநாடு மண்வள பாதுகாப்பு அதிகாரி தாஸ் தெரிவிக்கிறார் ‘‘வெள்ளத்துக்குப் பின் மண்ணின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், மண்புழுக்கள் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு டன் மண்ணில் 5 கிலோ வரை உயிரி பொருட்கள் இருக்கும். அவை 50 லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும். வெள்ளம் காரணமாக இந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம். இதனால், மண்ணில் நீர் தேக்கி வைக்கும் திறன் குறைந்து விடும். மண் வறண்டு இருந்தால் வெயிலில் அதிகம் சூடாகும். இதனால் மண்புழுக்கள் அதிகம் வெளியேறி இறந்திருக்கலாம்’’ என்றார்.
எது எப்படியோ முதல் முறையாக மண் புழுக்கள் இப்படி அதிகளவில் இறப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது