நேற்ற் வேலூர் மத்திய சிறையில் இருந்து காலை 7.35 மணியளவில் கருணாஸ் வெளியே வந்தார்.இதையடுத்து அங்கு காத்திருந்த அவரது கட்சியினர் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது, கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மீது ெபாய் வழக்கு போட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரியை விசாரிக்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒட்டுமொத்த அதிகாரிகளும் என் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இதனை மக்கள் வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எந்த நிலை வந்தாலும், தன்னிலை மாறாது. இன்னும் ஆயிரம் வழக்குகளையும் சந்திக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காவல்துறை அதிகாரியை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸை கடந்த 23ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அன்று மாலையே பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் மேலும் 2 வழக்குகளை கடந்த 26ம் தேதி பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் மாலை தீர்ப்பளித்தது.வேலூர் மத்திய சிறையில் இருந்து கருணாஸ் வெளியே வந்தார்
இன்று சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தபின் கருணாஸ் அளித்த பேட்டியில், நாட்டில் கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எனது கைது நடவடிக்கையே உதாரணம். இதுவரை வழக்குகள் ஏதும் இல்லாத நிலையில் என்மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டுள்ளது. என்னை அச்சுறுத்தும் விதமாக அரசின் நடவடிக்கைகள் உள்ளது. தேவைப்பட்டால் கூவத்தூரில் நடந்த விவரங்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன் அவரது அனுமதியுடன் வெளியிடுவேன் என்றார்.
ரெட்டை இலையில் வென்ற கருணாஸ் கூவத்தூர் விஷயங்களை வெளியே விடுவேன் என்று சொன்னது அதிமுக வட்டாரத்தை பரபரப்பாக ஆக்கி உள்ளது .