பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு 2018-ம் ஆண்டு முதல் தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழக அரசு மாநில விருதாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி வருகிறது.
 
இந்த ஆண்டு கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.ரக்‌ஷனா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கரூர் மாவட்டம் முழுவதும் நடுவதற்காக நன்கொடையாக வழங்கியதோடு, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண் தானம் செய்வதற்கு ஊக்குவித்தது, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது, உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் பாய்ச்சும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது, பொருளாதார காரணத்தினால் பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மூன்று மாணவர்களின் கல்வியை தொடர்வதற்காக தன் பெற்றோர் மூலமாக நிதியுதவி வழங்கியது போன்ற பணிகளை பாராட்டி, ரக்‌ஷனாவுக்கு முதல்-அமைச்சர் மாநில அரசின் விருதாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு பத்திரமும் வழங்கினார்.
 
குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி திட்ட இலக்கை அடைந்ததற்காக, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
இதற்காக, தேசிய பெண் குழந்தைகள் தினமான கடந்த ஜனவரி 24-ந் தேதியன்று டெல்லியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
 
மாவட்ட அளவில், திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சென்றடையும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்ததற்காக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு “மேம்பட்ட சமூகப் பங்கேற்பு” என்ற பிரிவின் கீழ் தேசிய விருது அந்த விழாவில் வழங்கப்பட்டது.
 
தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை துணிச்சலுடன் போராடி நிறுத்தியதற்காக, 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது பெற்ற நந்தினி, டெல்லியில் நடைபெற்ற விழாவில், “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்ட உள்ளூர் சாதனையாளராக அறிவிக்கப்பட்டார்.