மேட்டூர் அணையிலிருந்து பொங்கிப்பாயும் வெள்ளத்தை காண பொதுமக்கள் திரண்டனர். 13 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது
இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் விரிவாக்கம் ஜாக்குவார் டி.வி.எஸ். காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு நவீன், பிரவீன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரை முள்ளங்குடியில் உள்ள தங்களது குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர்.
இந்நிலையில் நவீன் தனது 1½ வயது மகன் அனிருத்துடன் கொள்ளிடம் ஆற்றுப்படித்துறையில் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். தான் விழும் போது குழந்தையை விழ கூடாது என்று படித்துறையில் எறிந்து விட்டு விழுந்ததால் அந்த குழந்தை சிறு காயத்துடன் உயிர் தப்பியது.
ஆனால் ஆற்றில் விழுந்த நவீன் வெள்ள பெருக்கு காரணமாக போராடி தத்தளித்தும் முடியவில்லை குடும்பதினர் கூச்சலை கேட்டு அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு போராடிய அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான நவீன் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறையில் சென்னை வந்த அவர் குல தெய்வ கோவிலுக்கு வந்த இடத்தில் செல்பி எடுக்கும் ஆசையில் உயிரிழந்துள்ளார் என்பது அந்த குடும்பத்தை மட்டும் அல்ல அந்த் வட்டார பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது