ராஜிவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையம் (சிஐசி), ‘‘2000ம் ஆண்டுக்குப் பிறகு ஆயுள் தண்டனை கைதிகளின் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது மன்னிப்பு மனு மீதான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2015ம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொது மன்னிப்பு வழங்க அரசு வகுத்த விதிமுறைகளின் நகல் தர வேண்டும் என்றும் .,

2010 முதல் 2015 வரை நாடு முழுவதும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் குறித்த விவரம், பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுத்த உத்தரவுகள் குறித்த தகவலையும் தர வேண்டும்’’ என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், 2010 முதல் 2015 வரை 20 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியது. இது நீதிமன்ற விவகாரம் என்பதால் மற்ற எந்த தகவலையும் தர மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து பேரறிவாளன் மத்திய தலைமை ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையர் யசோவர்தன் ஆசாத் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற விவகாரம் எனக்கூறிய உள்துறை அமைச்சகம் சரியான பதிலை அளிக்க தவறியிருக்கிறது. பொது மன்னிப்பு வழங்கும் விவகாரங்களை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும் போது அதை அனைவரும் அறிகிறோம். ஆனால் அதே நபர் விடுவிக்கப்படும்போது எதற்காக விடுவிக்கப்படுகிறார் என்பதை மக்கள் அறிவது அவசியம்.

அரசின் விதிமுறைகளை மனுதாரர் அறிந்து கொள்ள உரிமை உண்டு. அது எந்த விதித்திலும் நீதிமன்ற தீர்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அதே நேரத்தில் இது பொதுநலன் சார்ந்ததும் கூட. எனவே அத்தகைய விதிமுறைகளை அனைவரும் அறியும்படி வெளியிட வேண்டும். பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிடக்கூடாது என எந்த தடையும் இல்லை.

எனவே 2000ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட பொது மன்னிப்பு மனுக்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.