ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
 
ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் தொடர்ந்து கோரி வந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வட்டி வீதம் 0.25 சதவீதம் என இரு முறை உயர்த்தப்பட்டது.
 
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டமான 6வது நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி (பிப்.5 – 7) வரை நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது.
 
வட்டி விகிதம் குறைத்திருப்பது, அதிக மூலதனம் செய்யப்பட்டுள்ள தொழிலில் உலகளவிலான தனது போட்டியிடும் திறனை வளர்த்துக் கொள்ளவும், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது.
 
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையின் பலனை தொழில்துறையில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் விதமாக அனைத்து வங்கிகளும் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.