சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக, விசாரணைக்காக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆஜரானார்.
 
தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள ஒரு சொத்தை பண்டாரி, கடந்த 2010-ஆம் ஆண்டில் வாங்கிய விலைக்கே விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து, அவரது மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், பண்டாரிக்கும், வதேராவின் ஸ்கைலாட் ஹாஸ்பிடாலிடி நிறுவனத்தின் ஊழியரும், வதேராவின் உதவியாளருமான மனோஜ் அரோராவுக்கும் இடையே தகவல் பரிமாற்றங்கள் இருந்தது தெரிய வந்தது.
 
இதனால் லண்டனில் உள்ள சொத்தின் உண்மையான உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்றும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மூலம் அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
 
அதனடிப்படையில், ராபர்ட் வதேராவுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்த வழக்கில், மனோஜ் அரோரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனோஜ் அரோரா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்று அமலாக்கத் துறை தெரிவித்தது.
 
இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கான இடைக்காலத் தடை பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
 
அதேசமயம் இவ்வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், ராபர்ட் வதேராவுக்கு இம்மாதம் 16ஆம் தேதி வரையிலும் இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
 
மேலும், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு ராபர்ட் வதேரா நேரில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிபதி விதித்தார்.
 
அதன்படி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா புதனன்று முதல்தடவையாக ஆஜரானார்.
 
அப்போது அவரது மனைவியும் உத்தரபிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடனிருந்தார். ஐந்து மணி நேர விசாரணைக்கு பின் வதேரா அங்கிருந்து சென்றார். அவரை மீண்டும் வியாழன் காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
அதன்படி காலை ஒரு மணிநேரம் தாமதாக 11.20 மணியளவில் வதேரா அமலாக்கத்துறையின் ஜாம் நகர் அலுவலகத்தில் ஆஜரானார். இம்முறை அவருடன் பிரியங்கா காந்தி வரவில்லை. ஏறக்குறைய இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் பகல் 01.30 மணிக்கு கிளம்பிச் சென்றார்.
 
இன்றைய விசாரணையில் வதேராவுக்கும், தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரியின் உறவினர் சுமித் சதாவுக்கும் இடையே நிகழ்ந்த மின் அஞ்சல் பரிமாற்றங்கள் குறித்து முழுமையாக கேள்விகள் எழுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.