சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனித்துவமான கதைக்களம் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “சைகோ படம் தயாராகிவருகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.
இந்நிலையில் இளம் நடிகர் மைத்ரேயா, இயக்குநர் மிஷ்கின் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி ரூ.1 கோடி பணம் வாங்கிக் கொண்டார். ஆனால் அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடைவிதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மைத்ரேயன் அளித்த பேட்டியில், “மிஷ்கினுடன் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று சத்தியம்செய்தார்.
ஆனால் அதே கதையை வேறொரு ஹீரோவை வைத்து எடுக்கிறார். எங்கள் படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் பேசினோம். அதில் ஒரு கோடியை அட்வான்சாக கொடுத்தோம். பலமுறை பேச முயற்சித்தும், அவர் முன்வரவில்லை.
இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் அவர் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஆகையால் நீதிமன்றம் சென்றேன். விஷால் உதவி செய்வதாக கூறியுள்ளார். நான் அடுத்ததாக ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளேன்” என்று குறிப்பிட்டார்.