உத்தர பிரதேச மாநிலத்தில் கிராம மக்கள் 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்டும், 2-வது டோஸாக கோவோக்சின் தடுப்பூசியும் கவனக்குறைவால் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிலேயே மோசமாக சொதப்பிய மாநிலங்களில் ஒன்று பாஜக ஆளும் உத்தர பிரதேசம். போதுமான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் மக்கள் கொத்து கொத்தாக கொரோனாவிற்கு பலியாகின்றனர்.
அதைவிட கொடுமையாக கொரோனவால் இறந்தவர்களின் உடல்களை கூட சரியாக அடக்கம் செய்யாமல், கங்கை நதியில் உடல்களை வீசி எறிந்த கொடுமையும், வற்றிய நதியில் பல நூறு உடலை மணலை போட்டு மூடி விட்டு சென்ற கொடுமையும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.
தற்போது உத்தர பிரதேசத்தில் இன்னொரு கொடுமை அரங்கேறி உள்ளது. ஒரு கிராமத்தை சேர்ந்த 20 நபர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும், 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
ஆதாஹி கலன் என்ற கிராமத்தை சேர்த்த 20 பேர் பாத்னி ஆரம்ப சுகாதாரமையத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டோஸாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த மே 14 ஆம் தேதி 2வது டோஸ் செலுத்த செல்லும்போது கோவேக்சின் தடுப்பூசியை சுகாதார ஊழியர்கள் செலுத்தியுள்ளனர். மக்களுக்கு இந்த தடுப்பூசி மாற்றிக்கொடுக்கப்பட்ட பின்பே, இந்த தவறு நேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து உத்தர பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இது ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் செய்த தவறு. இதை விசாரிக்க உத்தரவிட்டு உள்ளோம். இதுகுறித்து சுகாதார ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
மேலும் தடுப்பூசி மாற்றி கொடுக்கப்பட்ட 20 நபர்களிடம் அவர்களின் உடல்நிலை குறித்து சோதனை செய்தோம். அவர்கள் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தடுப்பூசி மாற்றி போடப்பட்ட கிராமத்தினர் கூறுகையில், “நாங்கள் முதல் டோஸாக கோவிஷீல்டு போட்டுக்கொண்டோம். 2வது டோஸாக கோவாக்சின் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்த செல்லும்போது, நாங்கள் முதல் டோஸாக எதை போட்டுக்கொண்டோம் என்பதை யாரும் பார்க்கவில்லை.
எங்களிடம் எந்த அதிகாரியும் உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. தடுப்பூசிகளை மாற்றி போட்டபின் இவர்கள் ஊர் பக்கமே வரவில்லை. ஒருவர் கூட எங்களிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை” என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ வல்லுனர்களிடம் கேட்டபோது, “இரண்டு தடுப்பூசிகளையும் ஒரு குறிட்ட நாட்களுக்குள் இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் முதல் டோஸின்போது கோவிஷீல்டு எடுத்துக் கொண்டால், 2வது டோஸின்போதும் அதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல்தான் கோவேக்சின் தடுப்பூசிக்கும்.
ஒருவேளை மாற்றி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்.. என்ற கேள்வியெல்லாம் எழுப்பப்பட்டன. ஏன் தேவையில்லாத விசப்பரீட்சை என்ற பதிலே மருத்துவர்களிடம் உள்ளது. இது மருத்துவ ரீதியில் இது மிகப்பெரிய கவனக்குறைவாக பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். மேலும் அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் அரங்கேறின. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் இவ்வளவு பெரிய தவறு நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்- இந்திய மருத்துவர் சங்கம்