பொதுப்பணித்துறை அலட்சியத்தால் முக்கொம்பு மதகுகள் உடைந்த நிலையில் கல்லணை, மாயனூர், அணைக்கரை தடுப்பணைகளுக்கும் ஆபத்து வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது
காவிரி நதி பிரச்னை ஏற்பட்டு 40 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பு என தமிழகத்திற்கு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நீர் வழங்க வேண்டும் என்ற வகையில் ஆணையிட்டும் தண்ணீர் இதனால் தமிழ்நாட்டில் உரிய பருவங்களில் எந்த பயிரும் சாகுபடி செய்ய முடியாமல், மகசூல் இழந்து, சாகுபடி பரப்பு குறைந்து, பொருளாதாரம் சிதைந்து தற்கொலை வரை சென்று விவசாயிகள் சீரழிந்துவிட்டனர்.
இதனால் தொடர்ந்து 7வது ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போனது. விவசாயிகள் கடனில் தத்தளித்து வருகின்றனர். லட்சணக்கான விவசாய கூலி தொழிலாளர்கள் மாற்று பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக கர்நாடகா, கேரளா அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூருக்கு வந்து சேர்ந்தது. இதனால் இந்தாண்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.
குறுவை பருவம் தவறியதால் சம்பா சாகுபடிக்காக கடந்த ஜூலை 19ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 22ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கிடையில் கர்நாடகாவிலிருந்து கடந்த 20 நாட்களாக விநாடிக்கு சுமார் 2.50 லட்சம் கன அடி வரை உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
டெல்டாவில் பெருவெள்ளம் ஏற்படும் போது உபரி வடிகாலாக பயன்படும் கொள்ளிடத்தில் விநாடிக்கு 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருச்சி அருகில் உள்ள முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் சுமார் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் முக்கொம்பு கொள்ளிடத்தில் 9 மதகுகள் அடித்து செல்லப்பட்டு தண்ணீர் கொள்ளிடத்தில் பாய்ந்ததால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பதற்றமடைந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டபின்னர் கொள்ளிட மதகுகளை சீரமைக்கும் பணியை தொடங்கியது. மேட்டூர் அணைக்கு கீழே கரூர் மாயனூர் தடுப்பணை, திருச்சி முக்கொம்பு தடுப்பணை, தஞ்சை கல்லணை , அணைக்கரை தடுப்பணை உள்ளன. இவை நான்கும் தடுப்பணைகளே தவிர நீரை தேக்கி வைத்து திறந்துவிடும் அணைகள் இல்லை.
இங்கிருந்து நீரை பிரித்து அனுப்பும் பணியே நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த தடுப்பணைகளை வலு குறையாமல் பாதுகாத்து பராமரிக்க பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவை முறையாக செலவிடப்படவில்லை. 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றபோது தடுப்பணை உடைந்திருந்தால் மிகப் பெரிய அளவில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக முறையாக காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் தடுப்பணைகள் பராமரிப்பில் போதிய அக்கறை செலுத்தாததே காரணம். வருடந்தோறும் பராமரிப்பு பணிகள் நடப்பதாக அதிகாரிகள், அதிமுக அரசின் ஆளும்கட்சியினர் வெற்று அறிக்கைகளை கூறுகின்றனரே தவிர அதற்கான வெள்ளை அறிக்கையை ஒருமுறை கூட வெளியிட்டதில்லை.
இதற்காக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் மக்கள் பணம் ஏப்பம் விடப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மக்களையே சேருகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கொம்பு தடுப்பணை கட்டப்பட்டு 180 ஆண்டுகள் ஆன நிலையில் பல முறை பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 1.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அதன் பின்னர் 2005ம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 4 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போதெல்லாம் இந்த தடுப்பணைக்கும் மதகுகளுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த பெருவெள்ளத்தைவிட குறைவாக அதாவது வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில் மதகுகள் உடைந்துள்ளது என்றால் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில் இல்லை என் கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள்
கடந்த 7 ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் பொதுப்பணித்துறை செயலற்ற துறையாக மாறிவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பொறுப்பற்ற பொதுப்பணித்துறையின் முகத்திரை முக்கொம்பு தடுப்பணை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதிலிருந்தே ெதரிகிறது.
கொள்ளிடம் அணை உடைந்ததால் தற்போது கல்லணை, மாயனூர், அணைக்கரை தடுப்பணைகள் வலுவுடன் உள்ளதா என்ற அச்சம்அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதுவரை வந்து கொண்டிருக்க கூடிய தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணைகளின் உறுதியை இப்போதைக்கு முழுமையாக சோதித்து பார்க்க இயலாது.
எனவே எதிர்காலத்தில் தடுப்பணைகளின் உறுதித்தன்மையை பிற மாநிலத்தை சேர்ந்த பொறியாளர்களை கொண்டு சோதித்து பார்க்க வேண்டும். கல்லணைக்கு கிழக்கே தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் முழுவதும் ஆறுகள், கிளை ஆறுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வாய்க்கால்கள், லட்சக்கணக்கான கிளை வாய்க்கால்கள், வடிகால்களால் பின்னி பிணைந்துள்ளன.
மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டால் மேற்கண்ட ஆறுகள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை கடுமையாக பாதிக்கும் என்பது உறுதி. எனவே தமிழக அரசு விரைவாக இத்தடுப்பணைகளை சோதித்து அதன் உறுதி தன்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் காவிரி டெல்டாவில் மழை, வெள்ள காலங்கில் பேரழிவை மக்கள் சந்திப்பார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என டெல்டா விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும்.,
மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்திட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்