சிதம்பரம் தாலுகா ஒரத்தூர் அருகே உள்ள சாக்காங்குடியை சேர்ந்தவர் வீரபாண்டியன் மகள் சிலம்பொலி (25). 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
 
இவரும் விருத்தாசலம் அருகே சின்னக்கண்டியங்குப்பத்தைச் சேர்ந்த சேகர் மகன் செல்லதுரை(28) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு செல்லதுரை வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த 12ம் தேதி இருவரும் நெய்வேலி அருகே உள்ள முதனை செம்பையனார் கோயிலில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். செல்லதுரை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரை சமாதானப்படுத்திவிட்டு சிலம்பொலியின் தாய் வீட்டில் விட்டுவிட்டு செல்லதுரை ஊருக்கு சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக செல்லத்துரையை போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரை பார்க்க சின்னகண்டியங் குப்பத்திற்கு சிலம்பொலி வந்துள்ளார்.
 
ஆனால் வீடு பூட்டி கிடந்துள்ளது. இதனால் கவலையடைந்த சிலம்பொலி நேற்று காலை செல்லதுரை வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலம்பொலி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கணவருடன் சேர்த்து வைத்தால்தான் செல்வேன் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
 
இதையடுத்து காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்த அவர் தர்ணாவை கைவிட்டு, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.