அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வியாழனன்று தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது
பாஜகவைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைகிறோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காக்கவும், இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்களின் மாண்புகளைக் காக்கவும் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
எங்களது பேச்சில் நாங்கள் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டும் குறித்துப் பேசினோம். பாஜகவைத் தோற்கடிப்பதையும், ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்”இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
அதேசமயம் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது ” நாட்டைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் நாங்கள் ஒன்று சேர்க்கிறோம். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்கும் பொதுத் தளமாக இதனைக் கருதுகிறோம். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இது தொடர்பாக திமுக தலைவரான ஸ்டாலினுடன் பேச உள்ளோம். அவர்களும் எங்களுடன் இணைவார்கள் ” இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
முன்னதாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று (வியாழக்கிழமை) தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரை தில்லியில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு சரத்பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றாக பணியாற்றினால், ஆர்பிஐ, சிபிஐ போன்ற நிறுவனங்களை நிச்சயம் காப்பாற்ற முடியும். இதுதொடர்பாக, மற்ற மாநில அரசியல் தலைவர்களுடன் சந்திரபாபு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. சிபிஐ மற்றும் ஆர்பிஐ போன்ற நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் எனும் பொது இலக்குக்காக பணிபுரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது . பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்த பிறகு குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும். பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து, நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சந்திரபாபு நாயுடுவின் பரிந்துரை தான்” என்றார்.
ஃபரூக் அப்துல்லா கூறுகையில் “ஜனநாயகமும் மற்றும் மக்களும் இன்று ஆபத்தில் உள்ளனர். அதனால் தான் நாங்கள் சந்தித்து நாட்டையும், நிறுவனங்களையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
காங்கிரஸ் தலைமையில் ஒன்று கூடும் தெலுங்கு தேசம் தேசியவாத காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவால் பாஜக தலைவர்கள் கவலையில் உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கசிகின்றன
Trackbacks/Pingbacks