நேர்மையான, திறமையான அதிகாரிகள் அரசுக்கு வேண்டாமாம்: உதயச்சந்திரன் பணியிட மாற்றம்
udhayachandran
தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய புரட்சியைப் படைத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
பள்ளி துவங்கும் போதே பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தது, தேர்வுக்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்தது முதல் பாடத் திட்டங்களை மிகச் சிறப்பான முறையில் மாற்றியமைக்க வழி வகை செய்தது வரை தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியவர் என்று தமிழக மக்களால் அறியப்படுபவர் பள்ளிக் கல்வித் துறை செயலராக இருந்த உதயச்சந்திரன்.
தனியார் பள்ளிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இவரது நடவடிக்கைகள் அமைந்தன. இதனால் தமிழக மக்கள் இனி வரும் காலம் அரசுப் பள்ளிகளுக்கான காலமாக மாறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இது தொடங்கும் முன்பே அவரை பணியிட மாற்றம் செய்யுமாறு வெளியில் இருந்து வந்த அழுத்தத்தால் அரசும் முடிவெடுத்திருந்தது.
ஆனால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த உதயச்சந்திரனின் பணியிட மாற்றத்துக்கு அப்போது மிகப்பெரிய எதிர்ப்புக் குரல் எழுந்ததால் அதனை செய்யாமல் தவிர்த்தது தமிழக அரசு. அதோடு சும்மா இருக்கவில்லை. உதயச்சந்திரனின் பதவிக்கு மேலே ஒரு பதவியை ஏற்படுத்தி அதில் ஒருவரை நியமித்து உதயச்சந்திரனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தியது.
இப்படியே சில காலம் ஓடிய நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் என்ற பெயரில் நேற்று வெளியான ஒரு அறிக்கையில் சத்தமே இல்லாமல் பள்ளிக் கல்வித் துறையின் பாடத்திட்டப் பிரிவு செயலராக இருந்த உதயச்சந்திரனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதுவும் தொல்லியல் துறை ஆணையாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் கூறியிருப்பது என்னவென்றால், பள்ளிக் கல்வித் துறை செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். பள்ளிப் பாடத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிர் அளித்தவர் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் திறமையான நேர்மையான அதிகாரிகள் இந்த அரசில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது என்பது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு இந்த மாற்றம் மிகுந்த மகிழ்ச்சி தருவதால் அவர்கள் பார்ட்டி வைத்து இந்த செய்தியை கொண்டாடுவதாக தகவலும் வந்துள்ளது
Trackbacks/Pingbacks