உணவு மற்றும் போதிய நிவாரணம் கிடைக்காததால் கன்னியாகுமரியில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் ராஜஸ்தான் நோக்கி டூவீலரில் புறப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உணவு கிடைக்காததால் சொந்த ஊருக்கு செல்ல மும்பையில் போராட்டம்
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மேலும் மே 3-ந் தேதி வரை 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு பல லட்சக்கணக்கானோர் நடந்தே சென்ற பெருந்துயரம் நிகழ்ந்தது. ஆனால் மாநில அரசுகள் இப்படி வெளியேறும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி முகாம்களுக்கு அனுப்பி வைக்கின்றது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் டூ வீலரில் குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இதற்காக ரூ10,000 முதல் ரூ15,000 வரை செலவழித்து டூ வீலர்களை விலைக்கு வாங்கியும் உள்ளனர்.
பிஞ்சு குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் டூ வீலரில் பயணித்த இவர்களில் பலர் நெல்லை மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பாக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், அரசிடமிருந்து போதிய நிவாரணம் மற்றும் உணவு, அடிப்படைதேவைகள் கிடைக்காததால் எங்கள் சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்தோம். நேற்று இரவு முதலே ராஜஸ்தானை நோக்கி எங்களது பயணம் தொடங்கிவிட்டது. நாங்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஒன்றாக பயணித்தோம். இதேபோல் வேறுவேறு பகுதிகளில் உள்ளவர்கள் பலர் ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று கூறினர்.
இவர்கள் அனைவரையும் நெல்லை மாவட்ட காவல் துறையினர் தடுத்து அரசு முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் ஒடிஷாவின் கோபால்பூரில் இருந்து நடைபயணமாக சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் கஞ்சம் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலை நீடிக்காமல் அந்தந்த மாநில அரசுகள் இதுபோல் முறைசாரா தொழிலாளர்களுக்கு போதிய நிவாரணம் சென்றுசேர வழிவகை செய்ய வேண்டும்.