ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சட்டத் திருத்த மசோதா 2021 இன்று (20.12.2021) மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் மற்றும் போலி வாக்காளர்களைத் தடுத்தல், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையை இணைத்தல் ஆகியவற்றை பிரதானமாக வைத்து தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இன்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021 தாக்கல் செய்தார். விவாதமின்றி இந்த சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021ன் முக்கிய சட்டத் திருத்தங்கள்:
- பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பு போல், வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் கார்டு இணைப்பது முதல் சீர்திருத்தமாகும். இந்த திருத்தத்தைக் கட்டாயமாக்காமல் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
- ஆண்டுக்கு ஒருமுறைதான் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைமுறை இருந்து வருகிறது. இதை ஆண்டுக்கு 4 முறை செயல்படுத்தத் திட்டமிட்பட்டுள்ளது.
- பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது, பாதுகாப்புப் பணியில் கணவர் இருக்கும்பட்சத்தில் அவரால் நேரடியாக சொந்த இடத்துக்கு வந்து வாக்களிக்க முடியாத சூழலில், அவருக்கு பதிலாக அவரின் மனைவி சர்வீஸ் வாக்கைச் செலுத்தலாம்.
அதேபோல், மனைவி அரசுப் பணியில் இருந்தால், அவர் வாக்களிக்க முடியாத சூழலில், அவரின் கணவர் சர்வீஸ் வாக்கை செலுத்த வகை செய்யும் திருத்தம் செய்யப்பட உள்ளது.
- தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் தேர்தல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சில இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய நிறுவனங்களைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதில் எதிர்ப்புகள் இருப்பதால் எந்த இடத்திலும் தேர்தல் நடத்தலாம் எனக் கொண்டுவரப்படுகிறது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், “இந்த மசோதாவின் மூலம் போலியாக வாக்களிப்பவர்களைத் தடுக்க முடியும். தேசத்தின் தேர்தல் நடைமுறை நம்பகத்தன்மையுடையதாக மாறும்” எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில், பாஜகவினர் பெரும்பான்மையாக இருப்பதால், மசோதா எளிதாக நிறைவேறியது. பின்னர் இந்த சட்டம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இந்நிலையில் இன்று மக்களவையில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றக் குழுவுக்குப் பரிந்துரை செய்து ஆய்வு செய்தபின் அறிமுகம் செய்யலாம் என்று கூறி இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.