கடல் மட்டம் 1990 முதல் 2100 ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அங்குலம் வரை உயர கூடும் என மத்திய மந்திரி மக்களவையில் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய சுற்று சூழல் துறை இணை மந்திரி மகேஷ் சர்மா, சமுத்திர தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் நடத்திய ஆய்வுகளில் இந்திய கடலோர பகுதிகளில் கடல் மட்டம் வெவ்வேறு விகிதங்களில் மாறி கொண்டு உள்ளது.
இதனால் கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி மற்றும் மகாநதி ஆகிய கிழக்கு கடலோர டெல்டா பகுதிகள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் ஐ.நா. அமைப்பில் பருவகால மாற்ற திட்டங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை இந்தியா அளித்துள்ளது. இதில், கடல் மட்டம் 1990ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அங்குலம் அளவிற்கு உயர வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதனால் கடலோர நிலத்தடி நீரின் உப்பு தன்மை கூடுதல், ஈரநிலங்கள் அழிதல் மற்றும் மதிப்புமிகு நிலங்கள் மற்றும் கடலோர சமூகத்தினர் மூழ்கி போகுதல் ஆகிய விளைவுகள் ஏற்படும் என தெரிவித்து உள்ளார்.
இவற்றில் மேற்கு இந்திய கடலோர பகுதிகளான குஜராத்தில் உள்ள கம்பத் மற்றும் குட்ச், மும்பை மற்றும் கொங்கன் கடலோரம் மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட கூடிய இடங்களாக உள்ளன.
இதனால் இங்கு உள்ள விவசாய நிலம் மற்றும் எண்ணற்ற நகர்ப்புற மற்றும் பிற நிலங்களும் மூழ்க கூடும். கடலோர பகுதிகளை காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.