கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. புயல் தாக்குதலில் சுமார் 63க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும், கால்நடைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தன்னார்வலர்கள் பலர் புயல் பாதித்த மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி நிவாரணம் கேட்டுள்ளது. மேலும், ரூ.5000 கோடியை உடனடி நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்காமல் மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியையும் பொருள் உதவியையும் புயல் பாதித்தப் பகுதிகளுக்குச் நேரடியாக சென்று செய்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தப்பின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், “தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது.
வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது.
கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலப்பை மக்கள் இயக்கம் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 500 பசுக் கன்றுகளை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு கன்றுகள் வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் மெத்தன் போக்கை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டினார். மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை விரைவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல், நடிகர் மோகன் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஜெனரேட்டர்கள், சோலார் விளக்குகள், அரிசி, பருப்பு வகைகள், தார் பாய்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, வழியில் மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியர்களை பாராட்டி, அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.