இயக்குனர் ஷங்கர், இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் வடிவேலு பேசியதற்கு இயக்குனர் சுசீந்திரன், சமுத்திரகனி, மூடர்கூடம் இயக்குனர் நவீன், தயாரிப்பாளர் அம்மா சிவா என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நேசமணி டிரெண்டிங்கில் இருந்த போது நடிகர் வடிவேலு தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். பிரெண்ட்ஸ் திரைப்படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சமீபகாலங்களில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு இயக்குனர் சிம்பு தேவன், இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஷங்கர், இயக்குனர் சிம்பு தேவன் இருவரும் என் நோக்கில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க விடவில்லை என புகார் கூறியிருந்தார். இதற்கு ஷங்கர் தரப்பிலும், சிம்பு தேவன் தரப்பிலும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தயாரிப்பாளர் சங்கம் 24ம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் வடிவேலு மீது ரெட் கார்டு போட்டிருக்கிறது. ஷங்கரும் சிம்புதேவனுக்கு ஆதரவாகவே இருந்தார். இந்நிலையில் வடிவேலுவின் குற்றச்சாட்டு பெரிதாக பேசப்பட்டது.
தற்போது வடிவேலுக்கு எதிராக தமிழ் சினிமா உலகில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சிம்புதேவனிடம் உதவியாளராக பணியாற்றி மூடர்கூடம் இயக்குனரான நவீன் தன் குருவுக்கு ஆதரவாக வடிவேலுவை தாக்கி டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்தார்.
தயாரிப்பாளர் அம்மா சிவா வடிவேலுவின் மேலான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் வடிவேலுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: வன்மையாக கண்டிக்கிறேன். வடிவேலு அவர்கள், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் சார் பற்றி அவர் பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குனர் சிம்புதேவன் 23ம் புலிகேசி படத்தில் அறிமுகமானார். தனது முதல் படத்திலே மாபெரும் வெற்றிப்படத்தை நமக்கு தந்தார். அதன் பிறகும் பல தரமான படங்களை நமக்கு தந்துள்ளார்.
ஒரு இயக்குனரை இவண் அவன் என்று பேசியிருப்பது தவறான அணுகுமுறை. 23ம் புலிகேசிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களில் ரிசல்ட் தமிழ் திரையுலகம் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குனர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இயக்குனரும் நாடிகருமான சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குனர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் படைப்பாற்றல் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.