ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களைப் பேசியும் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனச் சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்பமாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்தது.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மனுதாரர் அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில் முதலமைச்சரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு அளித்த உறுதியை மீறும் வகையில் துரைமுருகன் செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திற்கு உறுதியளித்த பின்னர் சாட்டை துரைமுருகன் மீது 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பார்த்து கோபமடைந்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி, நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரத்தை வெறும் பேப்பர் தானே என்று நினைக்கிறீர்களா என அதிருப்தியைப் பதிவு செய்தார்.
மேலும் நீதிபதி பேசுகையில், ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும், மைக் கிடைத்தது என்பதற்காகக் கண்டதை எல்லாம் பேச முடியாது என்று கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து சாட்டை துரைமுருகன் பேசிய விபரங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யுங்கள் என்று அரசு தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறும் வகையில் செயல்பட்டிருந்தால், அவரது ஜாமின் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தார்.