ஒன்றிய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது, “சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், தங்களது முதற்கட்ட தேர்வுகளின்போது, பிரதான தேர்வைப் போல, தங்களது விருப்ப மொழியின் கீழ் எழுத முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, இந்தி தெரியாத அல்லது பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியம்.
இந்தியைத் தாய் மொழியாக கொண்டவர்கள் 26 சதவீதம் மட்டுமே. ஆனால்,தேர்வு முடிவுகளில் இவர்களில், 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதை காண முடிகிறது.
ஒன்றிய பணியாளர் ஆணையம், ரயில்வே தேர்வுகள், வங்கித் தேர்வுகள் என அனைத்துமே இந்தியில் தான் உள்ளன. இது, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது.
எனவே, சிவில் சர்வீஸ் தேர்வு உட்பட ஒன்றிய அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளையும், அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலுமே நடத்துவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கனிமொழி கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.