ஒன்றிய பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கடந்த டிசம்பர் மாதத்துடன் தன்னுடைய பணியை நிறைவு செய்தார். அதன் பின்னர் அவர் பல்கலைக் கழக பணியை தொடங்கியுள்ளார்.
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கு பிறகு, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் பாமி துவா; பூனம் குப்தா, இயக்குநர் ஜெனரல், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER); மற்றும், முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் உட்பட பல பெயர்கள் அந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன
இந்நிலையில் இந்திய அரசின் அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டாக்டர்.அனந்த நாகேஸ்வரன் ஏற்கெனவே பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் பகுதி நேர உறுப்பினராக 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
இவர் ஐஎஃப்எம்ஆர் என்ற தொழில் சார்ந்த பட்டப்படிப்பு கல்லூரியில் டீனாக பணிபுரிந்து வந்தார். அத்துடன் கிரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஐஐஎம் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் தொடர்பான மேல் படிப்பை பயின்றுள்ளார். அத்துடன் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் அனந்த நாகேஸ்வரன் பல நூல்களை எழுதியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி குல்சார் நடராஜனுடன் இணைந்து ‘இந்தியா வளர முடியுமா..’ மற்றும் ‘நிதியத்தின் எழுச்சி: காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள்’ ஆகிய நூல்களையும் மற்றும்
உலக வங்கியின் அப்போதைய இயக்குநரும், இப்போது நிதிச் செயலாளருமான டி.வி.சோமநாதனுடன் இணைந்து தி ‘எகனாமிக்ஸ் ஆஃப் டெரிவேடிவ்ஸ்’ என்ற நூலையும் எழுதியுள்ளார். மேலும் விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன், கொள்கை வகுப்பாளர்கள் விரிவான ஆலோசனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அனந்த நாகேஸ்வரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வது வழக்கம். இந்த பொருளாதார ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையில் தயாரிக்கப்படும்.
இந்தாண்டு கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் டிசம்பர் மாதமே தனது பணியில் இருந்து விடுபட்டதால், சஞ்சீவ் சன்யால் தலைமையிலான பொருளாதார குழு இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது.
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வரும் ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் வருவதற்கு ஒருநாள் முன்பாக வெளியாகும் என்பதால் அதில் ஒன்றிய அரசின் சில முக்கிய கவனங்கள் எந்தெந்த துறைகளின் மீது இருக்கும் என்று கணிக்க முடியும். ஆகவே இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கை எதை நோக்கி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.