மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்திய கப்பல் படையின் முக்கிய கப்பல்களில் ஒன்று என்று கூறப்படும் கிழக்கு கடற்படை கட்டளைப் பிராந்தியத்துக்கு உட்பட்ட ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடலோரப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 11 பேர் உள்ளூர் கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை கடற்படை பிராந்திய தலைமை நியமித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மும்பையில் உள்ள கொலபா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.