காட்டாங்கொளத்தூரில் இயங்கிவரும் எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இதன் நிறுவனர் பாரிவேந்தர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பலர் தற்கொலை செய்துகொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
2019-20 ஆம் கல்வியாண்டில் மட்டும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2 மாதங்களில் 3 தற்கொலை சம்பவங்கள் நடந்தேறிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு நடைபெற்று வரும் தற்கொலைகள் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி வருகிறது.
நிர்வாகத்தை எதிர்ப்பவர்களே தற்கொலை செய்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக மாணவர்கள் தரப்பில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்து வருகிறது. புகார் கொடுப்பவர்கள், கல்லூரியை விட்டு நீக்கப்படுவதும், மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி இந்து (27), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் முடித்துவிட்டு, தற்போது அங்கு மருத்துவ மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வருவதுடன், அங்குள்ள பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் ஜனவரி 12 ஆம் தேதி காலை விடுதி அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அங்கிருந்த ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில், இந்து தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மறைமலை நகர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின், இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11 ஆம் தேதி மாரடைபால் இறந்தார். இதனால் இந்து, மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்- வலுக்கும் கண்டனங்கள்