ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் சர்வதேச யோகா தினம் இந்த ஆண்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மோடி பிரதமர் ஆன பிறகு சா்வதேச யோகா தினம் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் கூட்டு யோகா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று வருகிறாா்.
அதன்படி 2020-ஆம் ஆண்டு சா்வதேச யோகா தினத்தின்போது லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவில் பிரதமா் மோடி, பொதுமக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சியில் ஈடுபடுவாா் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த மாா்ச் மாதம் அறிவித்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் சர்வதேச அளவில் டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது.
மேலும் வாசிக்க: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது; 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
உலகப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் வளர்த்துக் கொள்ள யோகாவைப் பயன்படுத்துவது பற்றி விளக்கப்படும் என்றும், இந்த சிக்கலான நேரத்தில் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை மேலாண்மை செயவதன் மூலமாக சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் இந்தியக் கலாச்சாரத் தொடர்புக் கவுன்சில் ஐசிசிஆர் தலைவர் டாக்டர் வினய் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.
இது தொடா்பாக ஆயுஷ் துறை செயலா் வைத்யா ராஜேஷ் கொடேச்சா கூறுகையில், “மிக வேகமாகப் பரவும் கொரோனா தொற்று காரணமாக, தற்போது கூட்டமாகக் கூட முடியாது. ஆகவே, இந்த ஆண்டு மக்கள் யோகாவை தங்கள் இல்லங்களில் குடும்பத்தினருடன் செய்யுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ‘என் வாழ்க்கை- என் யோகா’ வீடியோ பிளாக்கிங் போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். பிளாக்கிங் போட்டி ஏற்கனவே MyGov.gov.in போன்ற பல்வேறு தளங்களில் துவங்கி விட்டதாகவும், அது ஜூன் 21-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அதன் பின்னர் நடுவர்கள் கூட்டாக முடிவு செய்து, வெற்றியாளர்களின் பெயர்களை அறிவிப்பார்கள் என்றும் வைத்யா ராஜேஷ் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும், ரூ. 1 லட்சம், ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். உலகப் போட்டியாளர்களுக்கு, இது 2500 டாலர், 1500 டாலர், 1000 டாலர் என வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.