காரசார விவாதத்திற்கு பிறகு என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்
புதுடெல்லி:
 
தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவையில் நடைபெற்ற காரசார விவாதத்திற்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 351 பெரும்பான்மை உறுப்பினகள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டத்திருத்திற்கு ஒப்புதல் எதிர்பார்த்த ஒன்றுதான்
 
இந்த சட்ட திருத்தத்திற்கு மக்களவையில் 278 பேர் ஆதரவு அளித்துள்ளனர். திமுகவின் ராஜா , மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டத்திருத்தம் அதிகார முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என்ற குற்றசாட்டை முன் வைத்தனர்.
 
தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
 
தற்போது, இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக ஆயுதங்களை கடத்துவது, வெடி மருந்துகளை தயாரிப்பது, ஆள்கடத்தல், கள்ள நோட்டுகளை தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், இணையதளம் மூலமாக நடத்தப்படும் தீவிரவாதம் போன்ற பல்வேறு விதமான வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரம் என்ஐஏ அமைப்பிற்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே என்ஐஏ-க்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
 
மேலும் மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு தன்வசம் எடுத்துக்கொள்வதாகவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
 
இருப்பினும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இந்த சட்ட திருத்தத்தின் காரணமாக மாநிலங்களில் உள்ள செஷசன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்களாக அறிவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
இதன் மூலமாக தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றங்களை விசாரிப்பதற்கு எதுவாக சிறப்பு நீதிமன்றங்களை விரைவாக என்.ஐ.ஏ அமைப்பு உருவாக்குவதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவுள்ளது.
 
தற்போதைய நிலையில் என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அவகாசம் தேவை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.