கொடநாடு மர்ம மரணங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குற்றம்சாட்டி நான் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அவர் என் மீது சென்னை போலீஸில் அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்திருக்கிறார்.
இந்திய வரலாற்றில் 5 கொலைகளில் தொடர்புடையதாக முதலமைச்சர் ஒருவர் மீது புகார் எழுவது இதுவே முதல்முறை. இந்தசூழலில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார் தெகல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் மேத்யூ.
இதை தொடர்ந்து பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த விவரம் வருமாறு ” மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையான ெகாடநாடு பங்களா. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் சரி, இறந்த நேரத்திலும் சரி. கொடநாட்டில் மர்மமான மரணங்கள், திருட்டுகள், கொலை, கொள்ளைகள், விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது.
குறிப்பாக, கொடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று கொடநாடு பங்களா சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெயலலிதா கார்டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.
கனகராஜால் கொள்ளை அடிக்க நியமிக்கப்பட்டிருந்த சயன் மனைவியும், மகளும் சாலை விபத்தில் இறந்து போய் உள்ளனர்.
இந்த தற்கொலை, கொலைக்கு பின்னணியில் யார் என்ற சந்தேகம் தொடர்ந்து உள்ளது.
இதை தான் தெகல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் மேத்யூ ஒரு விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் குறும்படத்தை டெல்லியில் வெளியிட்டுள்ளார். சயன், வாலையார் மனோஜ் என்பவரும் நேற்றும், நேற்று முன்தினம் பேட்டி கொடுத்துள்ளனர். இவர்கள், எடப்பாடி பழனிச்சாமி சொல்லி தான் செய்தோம் என்று மேத்யூ கூறுகிறார்.
ஆனால் எடப்பாடி மேத்யூ சொன்னதற்கு வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. எடப்பாடி பதுங்குவதை பார்த்தால் இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளி அவர் தான் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.
கனகராஜ் எனக்கு தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் எனக்கு தெரியாது என்று சொல்லவில்லை.
ரூ.2 ஆயிரம் கோடி பணம் கொடநாட்டில் இல்லைஎன்றும் சொல்லவில்லை. 5 கோடி பேரம் பேசப்படவில்லை என்று சொல்லவில்லை.
கனகராஜ் மரணம் விபத்து தான் என்றும் சொல்லவில்லை. சயன் மனைவி,மகள் சாலை விபத்தில் இறந்தார் என்று சொல்லவில்லை. தினேஷ் தற்கொலை தான் செய்தார் என்று சொல்லவில்லை.
கொடநாட்டில் சிசிடிவி கேமரா வேலை செய்தது என்றும் சொல்லவில்லை.
எந்த பதிலும் சொல்லாமல் அவர் வழக்கு நடக்கிறது. அரசியல் சதி என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார். அவர் பேட்டி கொடுக்கும் போது அவர் முகம் எப்படி இருண்டு கிடக்கிறது என்று பார்க்கும் போது தெரிகிறது.
நான் கேட்கிறேன். கொலை புகாரை நிரூபித்தால் பதவி விலகத்தயார் என்று அவரால் சொல்ல முடியுமா.
இந்த புகாரை விசாரிக்க நீதி விசாரணை நடத்தப்படும் என்று சொல்ல முடியுமா.
5 கொலைகளுக்கு காரணமானவர் எடப்பாடி என்று மேத்யூ சொல்கிறார். உடனடியாக சொன்னவர் மீது வழக்கு போடுகின்றனர் என்றால் ஏன் பயம். நடந்தது விபத்து தான் என்று முதல்வர் நிரூபிக்கட்டும்.
இதுவரை நடந்த விசாரணை வாக்குமூலங்களை அவர் மக்களுக்கு தெரியப்படுத்தட்டும். அதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறாரா, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்க முடியாத சூழ்நிலையில் சிபிஐ இன்று இருக்கிறது.
கொடநாட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் கோடி எங்கே என்று நாட்டுமக்களுக்கு சொல்ல வேண்டும்.
இந்திய வரலாற்றிலேயே ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில் தான் என்று நான் சொல்லவில்லை. பத்திரிக்கையாளர் மேத்யூ சொல்லியிருக்கிறார். இதை விட அசிங்கம் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக இருக்க முடியாது.
திமுக கோரிக்கை என்னவென்றால், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மேலும் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்து, சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் கண்காணிக்க வேண்டும். இந்த விசாரணை ஆணையம் எடப்பாடி மட்டுமல்ல இன்றைய அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும்.
முதல்வரைஅழைத்து குடியரசு தலைவரும், கவர்னரும் விளக்க கேட்க வேண்டும். மேத்யூ, சயன், மனோஜ் ஆகியோர் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு தர வேண்டும். குடியரசு தலைவர், கவர்னரிடம் இந்த பிரச்சனையை திமுக கொண்டு செல்லவிருக்கிறது.
இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கா விட்டால் திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம்.
அப்போலோவில் நடந்ததை விட கொடநாட்டில் நடந்ததை விட இந்த கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக ஊடகங்கள் வெளியிடவில்லை என்கிற வேதனை வதைக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை கொடுத்தும் அதை ஊடகங்கள் வெளியிடவில்லை. அந்த அளவுக்கு ஊடகங்கள் மிரட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி குற்றவாளி என்று நிரூபணமானால் அந்த செய்தியாவது ஊடகங்கள் போடுமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேட்டி அளித்தார்.